குறிப்பேடு - I முன்னுரை

சாமுவேல், மற்றும் அரசர்கள், ஆகிய நூல்களில் குறிக்கப் பெற்ற நிகழ்ச்சிகளே, குறிப்பேடுகளில் வேறொரு கோணத்தில் காட்டப்படுகின்றன. முதலாம் குறிபேட்டின் இரு அடிப்படைக் கருத்துக்களாவன: 1. இஸ்ரயேல் மற்றும் யூதா அரசுகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கிடையிலும் கடவுள் தம் வாக்குறுதிகளைத் தொடர்ந்து காத்ததோடு, யூதாவில் இருந்தவர்கள் வழியாக, தம் மக்களுக்கான திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டு வந்தார். இதற்குச் சான்றாக தாவீது மற்றும் சாலமோன் ஆகியோர் ஆற்றிய பெரும் சாதனைகளும், யோசபாத்து, எசேக்கியா, யோசியா ஆகியோர் செய்த சமயச் சீர்திருத்தங்களும், மக்கள் கடவுளிடம் கொண்டிருந்த பற்றுறுதியும் விளங்குகிறன. 2. எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்பியவர் சாலமோனே. ஆயினும் அங்கு தொடங்கிய இறைவழிபாட்டு ஒழுங்கு முறைகளையும் அவற்றுக்கான குருத்துவ, லேவிய அமைப்புகளையும் ஏற்படுத்தியவர் தாவீதே. நூலின் பிரிவுகள் வழிமரபு அட்டவணை 1:1 - 9:44 சவுலின் இறப்பு 10:1 - 14 தாவீதின் ஆட்சி 11:1 - 29:30 அ) தொல்லைகளும் சாதனைகளும் 11:1 - 22:1 ஆ) கோவிலைக் கட்டுவதற்கான தயாரிப்பு 22:2 - 29:30