திருப்பாடல்கள் முன்னுரை

'திருப்பாடல்கள் ' என்னும் இந்நூல் விவிலியப் பக்திப் பாடல்கள், இறை மன்றாட்டுகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு கவிஞர்களால் இயற்றப்பட்ட இப்பாடல்களை இஸ்ரயேல் மக்கள் தங்கள் வழிபாட்டில் பயன்படுத்தினர். காலப் போக்கில் இவற்றின் தொகுப்பு அவர்களது திருமறை நூலின் முக்கியப் பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பக்திப் பாடல்கள் பல வகைப்படும்: அவையாவன : கடவுளைப் புகழ்ந்து வழிபடுவதற்கானவை. கடவுளிடம் உதவி, பாதுகாப்பு, மீட்பு வேண்டிப் பாடியவை. மன்னிப்பு வேண்டும் மன்றாட்டுகள். கடவுள் வழங்கிய ஆசிகளுக்கு நன்றி செலுத்தும் பாடல்கள். அரசர் பற்றிய பாடல்கள். அறிவுரை அளிக்கும் பாடல்கள். இவை தனி மனிதரின் வேண்டுதலாகவோ, நாட்டு மக்களின் மன்றாட்டகவோ அமைந்துள்ளன. இவற்றுள் பல, தனிப்பட்ட இறையடியாரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன; ஏனையவை இஸ்ரயேல் இனத்தின் நாட்டங்களையும் உணர்ச்சிகளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. கிறிஸ்து இயேசுவின் திருவாழ்விலும் திருப்பணியிலும், திருப்பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. புதிய ஏற்பாட்டிலும் இப்பாடல்கள்; மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இப்பாடல்கள் கிறிஸ்துவத் திருமறையிலும் திருச்சபையின் இறை வழிபாட்டிலும் தொடக்கத்திலிருந்தே சிறப்பிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நூலின் பிரிவுகள் முதல் பகுதி 1 - 41 இரண்டாம் பகுதி 42 - 72 மூன்றாம் பகுதி 73 - 89 நான்காம் பகுதி 90 - 106 ஐந்தாம் பகுதி 107 - 150