சபை உரையாளர் முன்னுரை

'சபை உரையாளர்' என்னும் இந்நூல் ஒரு ஞானியின் சிந்தனைகளைக் கொண்டது. அவர் மானிட வாழ்வு எவ்வளவு குறுகியது, முரண்பாடானது எனக் கண்டுணர்கிறார். மனித வாழ்க்கையில் காணப்படும் அநீதிகளும் அவநம்பிக்கையும் அவருக்குப் பெரும் புதிர்களாகத் தோன்றுகின்றன. எனவே, 'வாழ்க்கையே வீண்' என்ற முடிவுக்கு வருகிறார். மனித வாழ்வின் போக்கை ஆண்டு நடத்தும் இறைவனின் வழிகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் மக்கள் கடுமையாக உழைத்து இறைவன் அருளும் கொடைகளை வேண்டுமளவு துய்த்து மகிழுமாறு அறிவுரை கூறுகிறார். இந்நூலில் மனித வாழ்க்கையின் நிலையாமை, இயலாமை முதலியன விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் இந்நூல் விவிலியத்தில் இடம் பெற்றுள்ளமை மனிதர் தோல்வி மனப்பான்மையும் மனத்தளர்வையும் இறைவனது துணையால் வெல்லலாம் என்பதையே காட்டுகின்றது. இந்நூல் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகப் பலர் கருதலாம். ஆயினும், இக்கருத்துக்களை எதிரொலிக்கும் இதே விவிலியம், கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை தான் மானிட வாழ்வுக்கு நிறை பொருளை அளிக்கும் என்று வற்புறுத்திக் கூறுவதையும் அவர்கள் உணர வேண்டும்.