சீராக்கின் ஞானம் முன்னுரை

செலூக்கியர் ஆட்சியின் போது கிரேக்க மொழி, பண்பாடு, வழிபாட்டு முறை முதலியன யூதர்கள் மீது திணிக்கப்பட்டன. யூதர் பலரும் இவற்றை விரும்பி ஏற்கத் தொடங்கினர். இக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180) சீராக்கின் மகனும் எருசலேமில் வாழ்ந்த மறை நூலறிஞருமான ஏசு, தம்மவரை யூத மறையில் உறுதிப்படுத்தி ஊக்குவிக்க எண்ணினார். உண்மையான ஞானம் இஸ்ரயேலில் தான் உள்ளது; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் தான் அது அடங்கும் என்பதை வலியுறுத்தி இந்நூலை எழுதினார். எனவே இந்நூல் எபிரேயத்தில் 'சீராவின் மகனான ஏசுவின் ஞானம்' அல்லது 'பென் சீரா' என வழங்குகிறது. எபிரேய மொழியில் எழுதப் பெற்ற இந்நூலை, பாலஸ்தீனத்துக்கு வெளியே கிரேக்கச் சூழலில் வாழ்ந்த யூதர்களின் நலன் கருதி, ஏசுவின் பேரன் (ஏறத்தாழ கி.மு. 132) கிரேக்கத்தில் மொழி பெயர்த்து, அதற்கு ஒரு முன்னுரையும் வரைந்தார். தொடக்கத் திருச்சபையில் 'திருப்பாடல்கள்' நூலுக்கு அடுத்தபடி இந்நூல் திருவழிபாட்டிலும் மறைக்கல்வியிலும் மிகுதியாகப் பயன்பட்ட காரணத்தால், இது 'சபை நூல்' என்றும் பெயர் பெற்றது. இந்நூலின் எபிரேய பாடம் முழுதும் தொலைந்து விட, இதன் மொழி பெயர்ப்பான கிரேக்க பாடமே நமக்கு மூலபாடமாகப் பயனபட்டு. வருகிறது. எனினும் எபிரேய பாடத்தின் பெரும் பகுதி தொல்லியல் ஆராய்ச்சியின் பயனாக இன்று நமக்குக் கிடைத்துள்ளதால், கிரேக்க பாடத்தை நன்கு புரிந்து கொள்ள இது பெரிதும் துணை புரிகிறது. ஞானம்பற்றிய கருத்துக் குவியலைக் கொண்ட முதல் பகுதி, அன்றாட வாழ்வில் ஞானத்தைக் கடைப்பிடிக்கும் முறைபற்றிப் பேசுகிறது. இரண்டாவது பகுதி இஸ்ரயேலின் மீட்பு வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களைப் புகழ்வதோடு, அவர்களைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறது. நூலின் பிரிவுகள் முகவுரை வரிகள் 1 - 35 ஞானம் வழங்கும் நன்னெறி 1:1 - 43:33 மூதாதையர் புகழ்ச்சி 44:1 - 50:29 பிற்சேர்க்கை 51:1 - 30