யோவான் II முன்னுரை

யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம் 13 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு மிகச் சிறிய திருமுகம். இது 'தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமாட்டிக்கு' எழுதப்பட்டுள்ளது. 'பெருமாட்டி' என்பது ஒரு தனிப்பட்ட திருச்சபையைக்குறிப்பதாகும். இப்பெருமாட்டிக்கு ஒரு சகோதரியும் உள்ளார். இச்சகோதரி வேறொரு சபையைக் குறித்து நிற்கிறார். ஆசிரியர் இத்திருமுகத்தின் ஆசிரியர் தாம் மூப்பர் எனச் சொல்லிக் கொள்கிறார். கிறிஸதவச் சபைகளில் மூப்பர்கள் தலைமைப்பணி ஆற்றி வந்தார்கள். இம்மூப்பரது பெயர் குறிப்பிடப்படாததால், இவர் அக்காலத்தில் நன்கு அறிமுகமான ஒருவராக இருந்திருக்க வேண்டும். இத்திருமுகத்தை யோவான் எழுதினார் என மரபு கூறினாலும், அவர் சீடர் ஒருவர் இதனை எழுதியிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். 1யோவான் எழுதப்பட்ட காலத்திலேயே இத்திருமுகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். நோக்கமும் உள்ளடக்கமும் திருமுக ஆசிரியரான மூப்பர் திருச்சபைக்கு எச்சரிக்கை விடுக்கிறார். தவறான போதனையின் அடிப்படையில்பிரிந்து சென்றோர் கிறிஸ்து மனிதரானதை ஏற்றுக் கொள்வதில்லை; தாங்கள் முன்னேறியவர்கள் என இவர்கள் கூறிக் கொண்டாலும், அந்த முன்னேற்றம் கிறிஸ்தவக் கொள்கையின் எல்லையை மீறிய செயலாகும்; இப்படிப்பட்டவர்களைக் கிறிஸ்தவர்கள் வரவேற்கக்கூடாது என்கிறார் ஆசிரியர். ஒருவர் மற்றவருக்கு அன்பு செலுத்தி இயேசுவைப்பற்றிய வரலாற்று உண்மைகளை உறுதியாகச் சார்ந்து நிற்க வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார். அமைப்பு முன்னுரை வச 1 - 3 அன்பின் மேன்மை வச 4 - 6 எதிர்க்கிறிஸ்த்துக்கள் பற்றிய எச்சரிக்கை வச 7 - 11 முடிவுரை வச 12 - 13