கப்பல் பயணமும் வாழ்க்கையும்கப்பல் பயணம் போன்றது வாழ்க்கை

கப்பல் பயணம் போன்றது வாழ்க்கை. கப்பல் கிளம்பியதும் அலைகளில் தள்ளாடித் தள்ளாடி மேலும், கீழுமாய் இறங்கி தொட்டிலில் இட்டது போல் நம்மை ஆட்டிச் செல்லும். அது நம் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நடுக்கடலுக்குச் சென்றதும், வழுக்கலான தரை பரப்பில் ஊர்ந்து செல்வதைப் போல இதமாக இருக்கும். ஆனால், திடீரென புயல் வீசுகிறது. கப்பல் அங்குமிங்கும் ஆடுகிறது. அலைகளின் தாக்கத்தால் மேலே உயர்கிறது. பிறகு திடீரெனத் தாழ்கிறது. வாழ்க்கையும் இப்படித்தான். இன்பமாக செல்லும் வாழ்க்கையில் துன்பம் திடீரென வந்து தாக்குகிறது. ஒரு கப்பலில் பயணம் செய்தால் எப்படியிருக்கும் என்பதை பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது.

சங்கீதம் 107 வசனம் இதோ:
""கப்பலேறி, கடல் யாத்திரை பண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண் கிறார்கள். அவர் கட்டளையிட பெருங் காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும். அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள். ( மேலும் கீழுமாக அலைகளில் சிக்கி எழும்புவதும் இறங்குவதுமாக உள்ளது) அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் (பயம்) கரைந்து போகிறது. வெறித்தவனைப் போல் அலைந்து தடுமாறுகிறார்கள். அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது (அறிவைப் பயன்படுத்தும் சக்தியில்லை). அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் இக்கட்டுக்களுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுகிறார் ( அப்போது கடவுள் அவர்களை துன்பத்தில் இருந்து பாதுகாக்கிறார்) கொந்தளிப்பை அடக்குகின்றார். அலைகள் அடங்குகின்றது,'

ஒரு கப்பல் அலைகளால் பந்தாடப்படும் போது, காற்று, அலை ஆகியவற்றின் வல்லமை குறித்தும், அது தேவனுக்கு கட்டுப்பட்டது என்பதைக் குறித்தும் எழுதப்பட்ட உயிரோட்டம் மிக்க விவிலிய வசனம் இது. நீங்களும் வாழ்க்கை கப்பலில் இத்தகைய துன்பங்களைத் தானே சந்திக்கிறீர்கள். ஒருநாள் ஏற்றம், மறுநாள் வீழ்ச்சி, ஒரு நாள் துன்பம், இன்னொரு நாள் இன்பம்... இன்பம் வரும் போது நாம் ஆண்டவரை நினைப்பதில்லை, துன்பம் வந்தவுடன் அவரது கால்களை கட்டிக்கொண்டு கதறுவது என தொடர்கிறது. இந்த இரண்டு உணர்வுகளையுமே அவர் தான் தருகிறார். ""என்னைக் குறித்து அலட்சியமாய் இருப்பதன் மூலம் நீ சுதந்திரமாய் இருக்கிறாய் என்றால் அதுவும் எனக்கு மகிழ்ச்சி தானே!'' என்பதே அவரது கூற்றாக இருக்கும். ஆனாலும், அவரது வார்த்தைகளைக் கைக்கொள்ள கடும் முயற்சி செய்பவர்களுக்கு, அவர் மாலுமியாக இருந்து கரை சேர்ப்பார். இயேசுவின் சீடர்கள் கலிலியோ கடலைக் கடந்து செல்லும் போது பெரும்காற்று வீசியது. அவர்கள் மீன்பிடி வல்லுனர் களாக இருந்தும், அவர்களால் படகை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அப்போது இயேசு கடலின் மீது நடந்து வந்தார். அந்தக் காட்சியைக் கண்ட அவர்கள், அவரை தங்கள் படகில் ஏற்றிக் கொண்டனர். மற்றொரு சமயம் அவர்,

""இரையாதே! அமைதலாயிரு'' என கடலை அதட்டி அடக்கினார். ஆம்... வாழ்க்கைக் கடலில் மிதக்கும் நம்மைக் கரை சேர்க்கும் அந்த மாலுமியை நோக்கி துன்பங்கள் நீங்க, ""இயேசுவே, மீட்பரே! வாழ்க்கைக் கடலில் கடற் பயணத்தில் நீர் எங்கள் அருகில் இரும்! உம்மை வேண்டுகிறோம், அப்போது தான். மரணப்புயல் ஆர்ப்பரித்து அடித்துச்செல்லும் போதும், ""ஓ வாழ்வின் கர்த்தரே, சமாதானம், இது நான்தான் என்று நீர் சொல்லும்'' என ஜெபம் செய்வோம்.
துன்பம் வரும் வேளையில் அவர் நம் அருகில் இருக்க இந்த ஜெபம் பரிகாரமாக அமையும்.

f