அரசர்கள் - II முன்னுரை

'2 அரசர்கள்' என்னும் இத்திருநூல் பிளவுண்ட யூதா - இஸ்ரயேல் அரசுகளின் வரலாற்றை '1அரசர்கள்' விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது. இந்நூல் இரு பகுதிகளைக் கொண்டது: (1) கி.மு. 850 முதல் கி.மு. 722 (சமாரியாவின் வீழ்ச்சி) வரையிலான வடக்கு - தெற்கு அரசுகளின் வரலாறு. (2) சமாரியாவின் வீழ்ச்சியிலிருந்து, கி.மு. 586 (எருசலேமின் வீழ்ச்சி) வரையிலான யூதா அரசர்களின் வரலாறு. இந்நூல் யோயாக்கின் அரசனது விடுதலையுடன் முடிவுறுகிறது. யூதா, இஸ்ரயேல் ஆகியவற்றின் அரசர்களும் மக்களும் ஆண்டவருக்கு அஞ்சி நடக்காததாலேயே அந்நாடுகள் பேரழிவுக்குள்ளாயின என்பதை இந்நூல் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறது. எருசலேம் வீழ்ச்சியுற்றதும், யூதா நாட்டு மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதும் இஸ்ரயேலரின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளன. இந்நூலில் எலியாவின் பதிலாளரான இறைவாக்கினர் எலிசாவின் புதுமைகள் சிறப்பிடம் பெறுகின்றன. நூலின் பிரிவுகள். பிளவுபட்ட நாடு (தொடர்ச்சி) 1:1 - 17:41 அ) இறைவாக்கினர் எலிசா 1:1 - 8:15 ஆ) யூதா, இஸ்ரயேல் அரசர்கள் 8:16 - 17:4 இ) சமாரியாவின் வீழ்ச்சி 17:5 - 41 யூதா அரசு 18:1 - 25:30 அ) எசேக்கியாவின் ஆட்சி 18:1 - 21:26 ஆ) யோசியாவின் ஆட்சி 22:1 - 23:30 இ) யூதாவின் இறுதி அரசர்கள் 23:31 - 24:20 ஈ) எருசலேமின் வீழ்ச்சி 25:1 - 30