தெசலோனிக்கர் I முன்னுரை

பவுல் எழுதியவற்றுள் இதுவே முதலாவது திருமுகம். அவர் இதனைக் கி.பி. 51- ஆம் ஆண்டில் எழுதினார். தொடக்ககால மடலாக இருப்பதால் இதில் இறையியல் வளர்ச்சி மிகுதியாக இடம் பெறவில்லை. இருப்பினும் உயிர் பெற்றெழுதல், ஆண்டவரின் இறுதி வருகை ஆகியவை பற்றிய இதன் கருத்துக்கள் முக்கியமானவை. சூழலும் நோக்கமும் மாசிதோனியாவிலுள்ள ஒரு துறைமுக நகரம் தெசலோனிக்கா. அங்கு யூதர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தார்கள். பவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின் போது தெசலோனிக்கா வந்தார்; அங்கு எதிர்ப்பு இருந்ததால் பெரேயா வழி ஏதென்சு சென்றார். அங்கிருந்த போது தெசலோனிக்கர் பற்றிய நினைவே அவர் நெஞ்சில் நிறைந்திருந்தது. தாமே அங்குச் செல்ல முடியாத நிலையில் பவுல் தமக்குப் பதில் திமொத்தேயுவை அனுப்பினார். திமொத்தேயு தெசலோனிக்க சென்று திரும்பி வந்த போது நல்ல செய்தி கொண்டு வந்தார். அதாவது அங்குள்ள சீடர்கள் இன்னல்களுக்கிடையே தளரா ஊக்கத்துடன் கிறிஸ்தவராகத் தொடர்ந்து நிலைத்திருக்கின்றனர் என்பதை அவர் பவுலிடம் தெரிவித்தார்; அத்துடன், இறந்து போனவர்கள் குறித்து அவர்கள் கவலை கொணடிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார். நல்ல செய்தி அறிந்து மகிழ்ந்த பவுல் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் தெசலோனிக்கரின் தவறான கண்ணோட்டங்களைக் களையவும் விரும்பிக் கொரிந்திலிருந்து இத்திருமுகத்தை எழுதினார். உள்ளடக்கம் இத்திருமுகத்தில் பவுல் தெசலோனிக்க மக்களுடன் கொண்டிருந்த உறவு, அவர்கள் மேல் கொண்டிருந்த அக்கறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்; அங்குள்ள கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துகிறார்; அவர்கள் கிறிஸ்துவிடம் கொண்டிருந்த அன்புக்காகவும்,நம்பிக்கைக்காகவும் நன்றி கூறுகிறார்; அவர்களுடன் இருந்த போது அவர்வாழ்ந்த வாழ்வை நினைவூட்டுகிறார்; கிறிஸ்துவின் வருகை குறித்த ஐயப்பாட்டிற்கு விடையளிக்கிறார்; 'கிறிஸ்துவின் வருகைக்கு முன் இறந்தவர்கள், கிறிஸ்து வரும் போது நிலை வாழ்வில் பங்கு பெறுவார்களா? எப்போது கிறிஸ்து வருவார்?' போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரத்தில் கிறிஸ்துவின் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து அமைதியாக உழைக்கப் பணிக்கிறார். கிறிஸ்து திரும்ப வருதல் எந்த நாளில் நிகழும் எனத் தெரியாததால், அவரது வருகைக்காக எப்போதும் தயாராயிருக்குமாறு வேண்டுகிறார். அமைப்பு முன்னுரை ( வாழ்த்தும், தெசலோனிக்கரின் நம்பிக்கையும் முன்மாதிரியும்) 1:1 - 10 தெசலோனிக்காவில் பவுல் ஆற்றிய பணி 2:1 - 16 திருமுகம் எழுதப்பட்ட சூழ்நிலை 2:17 - 3:13 கடவுளுக்கு உகந்த வாழ்க்கை 4:1 - 12 ஆண்டவரின் வருகை 4:13 - 5:11 பொது அறிவுரைகள் 5:12 - 22 முடிவுரை 5:23 - 28