யோசுவா முன்னுரை

இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டு, மோசேக்குப் பின் இஸ்ரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. இவர் கானான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இஸ்ரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது 'யோசுவா' என்னும் இந்நூல். இந்நூலில் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், யோர்தான் ஆற்றைக் கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. முன்பு மோசேயின் மூலம் இஸ்ரயேலரை வழி நடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும். நூலின் பிரிவுகள் கானான் நாட்டைக் கைப்பற்றல் 1:1 - 12:24 அ) யோசுவா தலைமைப் பொறுப்பேற்றல் 1:1 - 18 ஆ) இஸ்ரயேலரின் வெற்றிகள் 2:1 - 11:23 இ) தோல்வியுற்ற மன்னர்களின் பெயர்கள் 12:1 - 23 நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தல் 13:1 - 21:45 அ) யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதி 13:1 - 33 ஆ) யோர்தானுக்குக் மேற்கே உள்ள பகுதி 14:1 - 19:51 இ) அடைக்கல நகர்கள் 20:1 - 9 ஈ) லேவியர்க்குரிய நகர்கள் 21:1 - 45 கிழக்கே குடியேறிய குலத்தார் 22:1 - 34 யோசுவாவின் இறுதி மொழிகள் 23:1 - 16 செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 24:1 - 33