பேதுரு II முன்னுரை

பேதுருவின் முதல் திருமுகம் போல் இதுவும் திருமுகப்பாணியில் அமைந்த மறையுரையே, யூதா திருமுகத்தோடு இது நெருங்கிய தொடர்புடையது. அதனை அடிப்படையாகக்கொண்டு இத்திருமுகம் வரையப்பட்டிருக்கலாம். பிற்காலமடலாக இருப்பதால் இது கிறிஸ்துவைப்பற்றிய வளர்ச்சியடைந்த கிறிஸ்தியல் கருத்துக்களைக் குறிப்பிடுகிறது. ஆசிரியர் இத்திருமுக ஆசிரியர் தம்மை "இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான சீமோன் பேதுரு" என எழுதினாலும் பேதுருதான் இத்திருமுகத்தை எழுதினார் என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. ஏனெனில் பேதுரு வாழ்ந்த போது இறுதி வருகை பற்றிப் பெரும் ஐய்ப்பாடு எதுவும் எழவில்லை. இது பிற்காலச் சூழ்நிலை ஆகும் (3:2-4). எனவே, பேதுருவின் வாரிசுகளில் ஒருவர் அவர் பாணியில் இத்திருமுகத்தை அவர் பெயரில் எழுதியிருக்க வேண்டும். சூழலும் நோக்கமும் இத்திருமுகத்தின் சூழலும் நோக்கமும் தெளிவாக இல்லை. யாருக்கு எழுதப்பட்டது என்றும் திட்டவட்டமாகக்கூற முடியவில்லை. அக்காலத்தில் பல போலிப் போதகர்கள் தோன்றி உண்மையைத் திரித்து மக்களைத் தவறான நெறியில் வாழத் தூண்டினர் (2:2). இச்சூழ்நிலை இக்கடிதத்தை எழுத வைத்திருக்கலாம். உள்ளடக்கம் வாசகர்கள் கடவுளைப்பற்றியும் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் உண்மையான அறிவைப் பெற வேண்டும். இந்த அறிவு இயேசுவை நேரில் பார்த்தும் அவர் போதனைகளைக் கேட்டும் இருந்த திருத்தூதர்களால் தரப்பட்டுள்ளது. கிறிஸ்து இனி வரமாட்டார் எனச் சிலர் பேசி வந்ததால் அவர் வருவது உறுதி என்பதை மீண்டும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்; எவரும் அழிந்து விடாமல், எல்லாரும் மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவே கிறிஸ்து வரக் காலம் தாழ்த்துகிறார் என்கிறார். அமைப்பு முன்னுரை (வாழ்த்து) 1:1 - 2 கிறிஸ்தவ அழைப்பு 1:3 - 21 போலி இறைவாக்கினர்களும் போலி போதகர்களும் 2:1 - 22 ஆண்டவருடைய வருகை 3:1 - 18