யோவான் I முன்னுரை

இத்திருமுகம் பொதுத்திருமுகங்களில் ஒன்றாக இருப்பினும் வழக்கமான வாழ்த்து, வாசகர் பற்றிய குறிப்பு எதுவும்இதில் இல்லை. எனினும் இதன் வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினராக அல்லது சபையினராக இருந்திருக்க வேண்டும். அங்கு முதியோர் இளையோர் அனைவரும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை நம்பிக்கையில் முதியோராகவும் இளையோராகவும் கூடக் கருதலாம். ஆசிரியர் யோவான் நற்செய்திக்கும் இத்திருமுகத்திற்கும் இடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. மொழி நடை, கலைச் சொற்கள், கருத்துக்கள் ஆகியவற்றில் இந்த ஒற்றுமை குறிப்பாகக் காணப்படுகிறது. இரண்டிற்கும் இடையே உள்ள ஒரு சில வேறுபாடுகள் எளிதில் விளக்கக் கூடியவையாய் இருக்கின்றன. எனவே இரண்டும் யோவான் சமுகத்திலிருந்தே தோன்றியிருக்க வேண்டும். திருத்தூதர் யோவான் நேரடியாக இதனை எழுதினாரா என்பது பற்றி அறுதியிட்டுக் கூற முடியாது. இத்திருமுகம் யோவான் நற்செய்திக்கு முன்னுரையாக எழுதப்பட்டது என்பர் ஒரு சிலர். இது யோவான் நற்செய்தியில் வரும் சில கருத்துக்களுக்கு விளக்கமாக எழுதப்பட்டது என்பர் வேறு சிலர். நோக்கம் அக்காலத்தில் எழுந்த சில தவறான கருத்துக்களை, குறிப்பாக இயேசுவைப்பற்றிய தவறான கருத்துக்களைக் களைவது இத்திருமுகத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக தெரிகிறது. கிறிஸ்தவச் சமூகத்தின் ஆன்மீகம் மற்றும் சமூகம் பற்றிய விழிப்புணர்வை ஆழப்படுத்துவதும் (3:17) திருமுகத்தின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். இச்சமூகத்தின் உறுப்பினர்கள் (2:19) இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் (2:22). அத்துடன் அவர் உண்மையில் மனிதராகவும் இருந்தார் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை (4:2). மீட்புக்கும் நலலொழுக்கம், அன்பு போன்றவற்றுக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர்கள் கூறி வந்தார்கள். திருமுக ஆசிரியர் இப்படிப்பட்டத் தவறுகளைக் களைய முற்படுகிறார். உள்ளடக்கம் இயேசு உண்மையில் மனிதராகவும் இருந்தார் என்று கூறி, அதை அவர்கள் நம்ப வேண்டும் என்கிறார் ஆசிரியர்; அன்புகூர்பவர்கள் சகோதர சகோதரிகளிடமும் அன்பு கூர வேண்டும் என அறுதியிட்டுக் கூறுகிறார். அன்பு பற்றி மிகுதியாகப் பேசுவதால் இதை அன்புக் கடிதம் எனலாம். அமைப்பு முன்னுரை (வாழ்வு அளிக்கும் வாக்கு) 1:1 - 4 ஒளியும் இருளும் 1:5 - 2:29 கடவுளின் பிள்ளைகளும் அலகையின் பிள்ளைகளும் 3:1 - 24 உண்மையும் பொய்மையும் 4:1 - 6 அன்பும் நம்பிக்கையும் 4:7 - 5:12 முடிவுரை 5:13 - 21