யோவான் III முன்னுரை

யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம் 15 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு மிகச் சிறிய திருமுகம். இத்திருமுகம் 'காயு' எனப்படும் தனி நபருக்கு எழுதப்பட்டுள்ளது. இறையியல் கருத்துக்கள் இத்திருமுகத்தில் இல்லை. எனினும் தொடக்க காலத் திருச்சபை வாழ்வைப் புரிந்து கொள்ள இது பெரிதும் உதவுகிறது. ஆசிரியர் இத்திருமுகம் மூப்பர் ஒருவரால் எழுதப்பட்டது. மூப்பரின் பெயர் கொடுக்கப்படவில்லை. சூழல்,நோக்கம், உள்ளடக்கம் இத்திருமுகத்தின் பெறுநர் காயு, கிறிஸ்தவ மறைப் பணியாளர்களை வரவேற்று விருந்தோம்பி வந்தார். அவர் திமேத்திரியு என்பவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார் ஆசிரியர். தியோத்திரபு என்பவர் இந்த மூப்பர் அனுப்பும் கடிதத்தையோ அவர் அனுப்பும் ஆள்களையோ ஏற்றுக் கொள்வதில்லை. அவர் கொள்கையளவில் மூப்பரிடமிருந்து மாறுபட்டவராக அல்லது மூப்பரின் தலைமையை ஏற்றுக் கொள்ளாதவாறு இருந்திருக்க வேண்டும். இத்திருமுகம் தொடக்க காலக் கிறிஸ்தவ நிலையை ஓரளவு சுட்டிக் காட்டுகிறது. தொடக்ககால திருச்சபையின் அதிகார அமைப்பையும் சபைகளின் தனித்தன்மையையும் இத்திருமுகம் எடுத்துக் காட்டுகிறது. சில மூப்பர்கள் பிற சபைகள் மீதும் அதிகாரம் கொண்டு விளங்கினாலும், நாள் செல்லச் செல்ல ஒரு சபையின் மூப்பர் இன்னொரு சபையின் மீது செலுத்தும் அதிகாரம் வரவேற்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. தியோத்திரபுவின் சிக்கலைத் தாமே நேரில் வந்து தீர்க்கப் போவதாகக் கூறுகிறார் திருமுக ஆசிரியர் (வ. 10). அமைப்பு முன்னுரை (வாழ்த்து) வச 1 - 4 காயுவுக்குப் பாராட்டும் பரிந்துரையும் வச 5 - 8 தியோத்திரபு கண்டிக்கப்படல் வச 9 - 10 திமேத்திரியுவுக்கு நற்சான்று வச 11 - 12 முடிவுரை வச 13 - 15