சாமுவேல் - I முன்னுரை

'1 & 2சாமுவேல்' என்னும் நூல்களில் இஸ்ரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. நீதித் தலைவர்களின் காலம் அரசுரிமையின் காலமாக மாறியது குறித்த நிகழ்ச்சிகள் '1சாமுவேல்' என்னும் இந்நூலில் இடம் பெறுகின்றன. மேலும், நீதித் தலைவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவரான சாமுவேல், இஸ்ரயேலின் முதல் அரசரான சவுல், சிறு பருவத்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இஸ்ரயேலின் பேரரசராக உயர்த்தப்பட்ட தாவீது ஆகிய மூவரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இந்நூலில் இடம்பெறுகிறது. கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் இருந்த போது வெற்றியும், அவருக்கு உண்மையற்றவர்களாய் நடக்கும் போது அழிவும் ஏற்படும் என்னும் கருத்து இந்நூலில் தெளிவாக்கப்படுகிறது. ஆண்டவரே இஸ்ரயேலின் உண்மையான அரசர் என்று கருதப்பட்டார். ஆனால், மக்களின் விருப்பத்திற்கு இணங்கி அவர் அவர்களுக்கு ஓர் அரசரைத் தேர்ந்தெடுக்கிறார். ஆயினும் அரசரும் இஸ்ரயேல் மக்களும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதும், செல்வர் வறியோர் ஆகிய எல்லா மக்களின் உரிமைகளும் கடவுளின் திருச்சட்டத்தின் கீழ் சமமாக்கப்பட வேண்டும் என்பதும் இந்நூலில் வலியுறுத்தப்படுகின்றன. நூலின் பிரிவுகள் இஸ்ரயேலின் தலைவர் சாமுவேல் 1:1 - 7:17 சவுல் அரசராதல் 8:1 - 10:27 சவுல் ஆட்சியின் முற்பகுதி 11:1 - 15:35 தாவீதும் சவுலும் 16:1 - 30:31 சவுல், அவர்தம் புதல்வர்கள் ஆகியோரின் இறப்பு 31:1 - 13